ஈரோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் , 'மகாராஷ்டிரா விவகாரத்தில் ஆளுநர் போன்ற மிக உயர் பொறுப்பில் இருப்பவர்கள் அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாக்கக் கூடிய மகத்தான பொறுப்பில் இருக்கிறார்கள்.
பொறுப்புகளை உணர்ந்து பொறுப்புகளுக்கு பெருமை சேர்க்கும் வகையில், அவருடைய அணுகு முறையும் நடவடிக்கையும் அமைய வேண்டும். ஆனால் மராட்டிய ஆளுநர், பாஜகவின் கைக்கூலியாக செயல்பட்டிருக்கிறார்' என்றார்.
மேலும், ' தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அரசு தொடர்ந்து கூறி வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஆணையம் அனைத்துக் கட்சி கூட்டத்தை இன்று தான் கூட்டியிருக்கிறது. முன்னதாகவே இதனை நடத்தி இருக்க வேண்டும். தேர்தலை எப்படி நடத்தப் போகிறோம் என்பதை எல்லாம் வெளிப்படையாக கருத்துகளை அறிந்து, இட ஒதுக்கீடு போன்ற அம்சங்களை வெளிப்படையான முறையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அறிவித்து, கருத்துகளை கேட்டு இருக்க வேண்டும்' என்றார்.