ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள ஒத்தக்குதிரை பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று (ஜன.6) காலை வழக்கம்போல் கல்லூரி மாணவி சுவர்ணா தனது எலக்ட்ரிக் பைக்கில், கோபிசெட்டிபாளையத்தில் இருந்து தனியார் இன்ஜினியரிங் கல்லூரி நோக்கி வெள்ளாளபாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது, கோபி அருகே உள்ள கல்லூரி மாணவர்களை ஏற்றிக் கொண்டு, சாலையில் மாணவி சுவர்ணாவின் இருசக்கர வாகனத்துக்குப் பின்னால் வந்த தனியார் கல்லூரிப் பேருந்து ஒன்று, மற்றொரு கல்லூரி வாகனத்தை இடது புறமாக முந்திச் செல்ல முயற்சி செய்துள்ளது.
அப்போது இடதுபுறத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற மாணவி மீது கல்லூரி பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் மாணவியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், மாணவி சுவர்ணா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் அருகில் இருந்த பொதுமக்கள் விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.