ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதியோர், கணவனை இழந்தவர்களுக்கு உதவித்தொகைக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் கதிரவன் கூறுவையில், “37 நாள்களுக்குப் பிறகு நேற்று (மே 22) ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. மஹாராஷ்டிரா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொழிலாளர்கள் மாவட்டத்திற்கு வந்துள்ளனர். தொற்று பாதிக்கப்பட்டவர் மகன், சமீபத்தில் சென்னையிலிருந்து ஊர் திரும்பியதால் அவருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம்.
மேலும், கரோனா கட்டுப்பாடுகளைப் பொறுத்தவரை முன்புபோல் இல்லாமல் தற்போது பாதிக்கப்பட்டவரின் வீடு, சுற்றியுள்ள நான்கு வீடுகள் மட்டுமே தனிமைப்படுத்தப்படும். பெரிய அளவில் கட்டுப்பாடுகள் முன்பைப்போல் இருக்காது. குறிப்பிட்ட அந்த வீட்டை மட்டுமே கண்காணிக்கப்படும். அந்த வீட்டிற்கு மட்டும் வெளிநபர்கள் செல்ல தடை விதிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.