தமிழ்நாடு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 70 சர்வோதய சங்கங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சந்தைப்படுத்தி விற்பனை செய்திடும் வகையில் ஆண்டுதோறும் மாநிலக் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்று வருகிறது.
இந்த சர்வோதய சங்கங்களின் மூலம் கதர் ரகங்கள், கதர் ஆடைகள், சேலைகள், பூஜைப் பொருட்கள், தேன், சோப்பு வகைகள் உள்ளிட்ட பொருட்கள் என மொத்தம் 195 கோடி ரூபாய் செலவில் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் கதர் கிராம வாரிய விற்பனை நிலையங்கள் மூலம் ஆண்டு ஒன்றுக்கு 238 கோடி ரூபாய் அளவிற்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதன் மூலம் 15 ஆயிரம் கிராமப்புற நூற்போர், நெய்வோர்க்கு மற்றும் கைவினைஞர்களுக்கு பாரத பிரதமர் திட்டத்தின் கீழ் 28 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. தற்போது, கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சந்தைப்படுத்தி விற்பனை செய்திடும் வகையில் மாநில அளவிலான கண்காட்சி இரண்டாவது ஆண்டாக ஈரோட்டில் இன்று தொடங்கியது.
இந்தக் கண்காட்சியை அம்மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தொடங்கி வைத்தார். அப்போது, கண்காட்சியில் இடம்பெற்றுள்ள 25 அரங்குகளையும் இடம்பெற்ற பொருட்கள் குறித்தும் கேட்டறிந்தார்.