ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடி, கடம்பூர், பர்கூர் மலைப்பகுதிகளில் அதிக குளிர் நிலவும் என்பதால் மலைக்கிராமங்களில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவ மாணவியருக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஸ்வெட்டர்கள் வழங்கப்பட்டுவருகின்றன.
இந்த ஸ்வெட்டர்கள் நவம்பர் மாத இறுதி அல்லது டிசம்பர் மாத தொடக்கத்தில் குளிர்காலம் தொடங்கும்போது மாணவர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம். இந்தக் கல்வியாண்டில் தற்போது குளிர்காலம் முடியும் நிலையில் இன்னும் மாணவ மாணவியருக்கு ஸ்வெட்டர்கள் வழங்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் இன்று சத்தியமங்கலம், தாளவாடி வட்டாரக் கல்வி அலுவலகங்களுக்கு ஸ்வெட்டர்கள் லாரிகளில் கொண்டுவந்து இறக்கப்பட்டுள்ளன. இன்னும் 20 நாள்களில் குளிர்காலம் முடிவடையும் நிலையில் இந்த ஆண்டு தாமதமாக ஸ்வெட்டர்கள் வந்து சேர்ந்ததால் பள்ளி மாணவர்களுக்கு இனிமேல் ஸ்வெட்டர்கள் வழங்கியும் பயனில்லை என மலைக்கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.