தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், இன்றுமுதல் (ஏப். 26) மேலும் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது.
சாமி தரிசனம் செய்ய தடை
அதன்படி கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என மத வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த பிரசித்திப் பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய இன்றுமுதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து கோயிலின் முகப்பு நுழைவு வாயில் மூடப்பட்டு, கரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோயிலில் ஆகம விதிகளின்படி அம்மனுக்கு நான்கு கால பூஜைகள் வழக்கம்போல் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயிலில் பக்தர்கள் சாமி கும்பிட தடை விதிக்கப்பட்டதால் பண்ணாரி அம்மன் கோயில் வளாகம் வெறிச்சோடி காணப்படுகிறது.
இதன்காரணமாக கோயில் வளாகத்தில் உள்ள தேங்காய், பழம் விற்பனை கடை, புகைப்பட விற்பனை கடைகள் உள்ளிட்ட கடைகளும் மூடப்பட்டுள்ளன.