ஈரோடு: தமிழக அரசு மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் துப்புரவுப் பணியாளர்கள், டிரைவர்கள், பில் கலெக்டர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அவுட்சோர்சிங் மூலம் இனி பணிகள் நிரப்பப்படும் என அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணை மூலம் தங்களது பணிகள் பாதிக்கப்படும் எனக் கூறி ஈரோடு மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் டிரைவர்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி அலுவலகத்தை 2வது நாளாக முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மாநகராட்சி ஒப்பந்தத் துப்புரவு ஊழியர் மோகன்ராஜ் மாநகராட்சி அலுவலகம் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து அங்குப் போராட்டத்தில் ஈடுபட்ட சக ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியிலிருந்த காவல்துறையினர் அவரை பத்திரமாக மீட்டனர்.
கடந்த 14 ஆண்டுகளாக வேலை செய்து வரும் நிலையில் பணிகள் அவுட்சோர்சிங் மூலம் தரப்பட்டால் தங்களுக்குக் குறைந்த ஊதியமே வழங்கப்படும் என்றும், தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு இல்லை என்பதால் போராட்டத்தில் ஈடுபடுவதாகத் தெரிவித்தனர்.