ஈரோடு:சத்தியமங்கலம் நகர்மன்ற உறுப்பினர்கள் மாதாந்திர கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதற்கு நகர்மன்றத் தலைவர் ஆர்.ஜானகி ராமசாமி தலைமை வகித்தார். ஆணையாளர் சரவணக்குமார் முன்னிலை வகித்தார். இந்தக் கூட்டத்தில் 19ஆவது திமுக உறுப்பினர் லட்சுமி பேசுகையில், “அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் லட்சுமணன், பழனிச்சாமி, புவனேஸ்வரி சாய்க்குமார் ஆகியோர் தனது வார்டில் உள்ள பிரச்னையை பேசி சமூக வலைதளங்களில் பரவ விடுகின்றனர்.
இதனைத் தடுக்க வேண்டும், அந்தந்த வார்டுகள் உறுப்பினர்கள் பிற வார்டுகளில் உள்ள பிரச்னையில் நுழையக்கூடாது" என புகார் தெரிவித்தார். இதற்கு நகர்மன்ற தலைவர் ஆர்.ஜானகி பதிலளித்து பேசுகையில் ”அந்த வார்டு உறுப்பினர்கள் சம்மந்தப்பட்ட வார்டில் நடக்கும் பிரச்னையை மட்டுமே பேச வேண்டும்” என்றார்.
இதற்கு அதிமுக உறுப்பினர் பழனிச்சாமி ஆட்சேபம் தெரிவித்து பேசுகையில், “சத்தியமங்கலம் நகர் முழுவதுக்கும் தேவையான மேல்நிலைக்குடிநீர் தொட்டி ஒரு வார்டில் உள்ளதால் மேல்நிலைத்தொட்டியில் உள்ள குறைபாடு கூறியதில் என்ன தவறு...?” என காரசாரமாக பேசியதற்கு அதிமுக நகர்மன்ற உறுப்பினர் லட்சுமணன் மற்றும் புவனேஸ்வரி சாய்க்குமாரும் ஆதரவு தெரிவித்து பேசினர்.