உலகம் முழுவதும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்து பிறப்பை கொண்டாடும் வகையில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அனைத்து தேவாலயங்களிலும் நேற்று இரவு முதல் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்று வருகின்றன.
அரியலூர்: உலகப் புகழ்பெற்ற ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயம், தூயமேரிமாதா தேவாலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டு கிறிஸ்துவின் பிறப்பை வெகுசிறப்பாக கொண்டாடிவருகின்றனர். கிறிஸ்தவர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
ஈரோடு: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி புனித அந்தோணியார் ஆலயம் சீரமைக்கப்பட்டு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கிறிஸ்துமஸ் விழா தொடங்கியது. அப்போது கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து குழந்தை இயேசுவை கையில் சுமந்தபடி ஆலயத்தை சுற்றி வந்த பங்கு தந்தை திரவியம் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து குழந்தை இயேசுவின் வரலாறு, நற்செய்திகள் தெரிவிக்கப்பட்டது. இந்த விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு குழந்தை இயேசுவை வழிபட்டு சென்றனர்.