ஈரோடு: சென்னிமலை அருகே பசுவபட்டி பிரிவைச் சேர்ந்த அர்ஜுனன் என்பவர், கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் ஜெபம் செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த சின்னசாமி மற்றும் அவரது மகன் கோகுல் ஆகியோர், எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது இச்சம்பவம் தொடர்பாக 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்த சென்னிமலை போலீசார் 2 பேரை கைது செய்துள்ளனர். இதற்கிடையே தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து சென்னிமலை பேருந்து நிலையம் முன்பாக கிறிஸ்துவ முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அந்த ஆர்ப்பாட்டத்தின்போது, அந்த அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் சரவணன், சென்னிமலையை கல்வாரி மலையாக மாற்றுவோம் என பேசியது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி, முருக பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கிறிஸ்துவ அமைப்பினரை கைது செய்யக் கோரி, கடந்த அக்டோபர் 13ஆம் தேதி, இந்து முன்னணி சார்பில் ஆயிரக்கணக்கானோர் சென்னிமலை பேருந்து நிலையம் முன்பாக திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.