மத்திய நீர்வளத் துறை ஆணையமானது காவிரி பாயும் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் தானியங்கி நீர் அளவீட்டு மானி பொருத்துவதற்காக காவிரி ஒழுங்காற்றுக் குழு அமைத்தது.
பவானிசாகர் அணையில் காவிரி ஒழுங்காற்று துணைக் குழு ஆய்வு - பவானி அணை
ஈரோடு: பவானிசாகர் அணையில் காவிரி ஒழுங்காற்று துணைக் குழுவினர் அணையில் நீர் வரத்து, வெளியேற்றம், நீர் தேக்கம் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர்.
இந்தக் குழுவானது நீர் வெளியேற்றம், நீர்வரத்து ஆகியவற்றை கணக்கிட 'காவிரி இணையதள கண்காணிப்பு அமைப்பு' அமைப்பதற்கு தேவையான விவரங்களை சேகரித்து வருகின்றது. இக்குழுவினர் ஜூன் 10ஆம் தேதி மேட்டூர் அணையில் நீர் வரத்து, நீர் வெளியேற்றம் நீர் அளவீட்டு மானி பொருத்துதல் ஆகியவற்றை ஆய்வு செய்த பின்னர் ஜூன் 11ஆம் தேதி பவானிசாகர் அணைக்கு வந்தனர்.
மத்திய நீர் ஆணைய ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் மோகன் முரளி தலைமையிலான துணை ஒழுங்காற்றுக் குழுவினர் பவானிசாகர் நீர்த்தேக்கம், நீர் வெளியேற்றம், பவானி ஆற்றுப்படுகை ஆகியவற்றை ஆய்வு செய்தனர். மேலும் கீழ்பவானி கால்வாய் மதகு, ஒன்பது ஆற்று மதகுகளை ஆய்வு செய்தனர். அணையில் தற்போது நீர் இருப்பு, பாசனத்துக்கு நீர் வெளியேற்றம் குறித்த விவரங்களையும் சேகரித்தனர்.