ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த கொத்தமங்கலத்தில் 3 மாத குழந்தைக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கிராமத்துக்கு வந்த ஆம்புலன்ஸ், குழந்தையை ஏற்றிக் கொண்டு சத்தியமங்கலத்தில் இருந்து புஞ்செய் புளியம்பட்டி வழியாக கோவை மருத்துவமனையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
இந்த நிலையில், ஆம்புலன்ஸ் நல்லூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற கார் ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாமல் தொடர்ந்து வேகமாக சென்று கொண்டிருந்துள்ளது. தொடர்ந்து பலமுறை ஹாரன் அடித்தும், சைரன் எழுப்பியும் கார் வேகத்தை கட்டுப்படுத்தவோ, ஓரமாக ஒதுங்கவோ இல்லாமலே சென்றுள்ளது.
எனவே ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவ உதவியாளர், இதனை வீடியோவாக எடுத்துள்ளார். பின்னர் அந்த வீடியோவை சமூக வலைதளங்களிலும் அவர் பதிவிட்டுள்ளார். மேலும் ஆம்புலன்ஸ்க்கு கார் வழிவிடாததால், குழந்தைக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியவில்லை என ஆம்புலன்ஸ் உரிமையாளர் கதிர், சத்தியமங்கலம் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் புகார் அளித்துள்ளார்.