ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த சங்கர் என்பவர் தனது வீட்டுக்கு முன்பாக பிரவுசிங் நிலையத்தையும், புகைப்படம் எடுக்கும் ஸ்டியோவையும் நடத்திவருகிறார்.
மேலும் இவர் கேமராவை வாடகைக்கு கொடுத்தும் வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் திருச்சியிலிருந்து வருவதாகவும் தனக்கு கேமரா வாடகைக்குத் தேவையென்றும் கூறி சந்தேகத்துக்குரியவர் தனது கடை கேமராவைத் திருடிச் சென்று விட்டதாக பெருந்துறை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்தப் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திருட்டில் ஈடுபட்டவரை தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்த நிலையில் பெருந்துறை பழைய பேருந்து நிலையப் பகுதியில் கேமரா பையுடன் சந்தேகத்துக்குரிய வகையில் ஒருவர் நின்று கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலை அடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் அந்த நபரைப் பிடித்து விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணாகப் பேசவே, சந்தேகத்தின் அடிப்படையில் அந்த நபரை காவல்நிலையம் அழைத்து வந்தனர்.
அங்கு மேற்கொண்ட விசாரணையில், அந்த நபர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பீர் ரிஸ்வான் ஹசன் ஆவார்.
இவர், நண்பருடன் இரண்டு சக்கர வாகனத்தைத் திருடியதால் சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் இவரது மனைவி, குடும்பத்தினர் விட்டு விலகியுள்ளனர். இதைத் தொடர்ந்து திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும், கடந்த சில மாதங்களாக கேமராக்கள் வாடகைக்குத் தரும் கடைகளாகத் தேடி ஈரோடு, பெருந்துறை, கோயம்புத்தூர் மற்றும் திருச்சியில் வாடகைக்கு கேமரா தேவையென்று கூறி கேமராக்களைத் திருடி அதனை கிடைத்த விலைக்கு விற்பனை செய்து வந்ததாகவும் தெரிய வந்தது.
இதையடுத்து அவரிடமிருந்து இரண்டு கேமராக்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவரை பெருந்துறை காவல்துறையினர் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறைக்காவலுக்கு அனுப்பி வைத்தனர்.