ஈரோட்டிலிருந்து கோபிச்செட்டிப்பாளையம் வரை தனியார் பேருந்தும், அரசுப் பேருந்தும் நேரப்பிரச்னை காரணமாக ஒன்றன் பின்னால் ஒன்றாகவும் அல்லது அதிவேகமாக ஒருவர் முந்திச்செல்வதும், பின்னால் வருவதுமாக பேருந்துகளை இயக்கி பயணிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளனர். இரு பேருந்துகளும் கோபிச்செட்டிப்பாளையம் பேருந்து நிலையம் வந்தடைந்தவுடன் அரசுப்பேருந்து ஓட்டுநர் கணேசமூர்த்தி, தனியார் பேருந்து ஓட்டுநர் மோகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதற்கு மோகன், நடத்துநர் செல்வராஜ் ஆகியோர் அரசுப்பேருந்து ஓட்டுநர் கணேசமூர்த்தியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். அதனால் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அதில் அரசுப்பேருந்து ஓட்டுநர், தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை தாக்கியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து தனியார் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் ஒன்றிணைந்து அரசுப்பேருந்து ஓட்டுநர் கணேசமூர்த்தியை பேருந்தினுள் வைத்து கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போது அடி தாங்கமுடியாத அரசுப்பேருந்து ஓட்டுநர் டயர் கழட்டும் ரிவரை எடுத்து தனியார் பேருந்து ஓட்டுநரை தாக்கியுள்ளார். அதில் தனியார் பேருந்து ஓட்டுநரும் காயமடைந்துள்ளார்.