ஈரோடு: தமிழகத்திற்கு காவிரி நீர் வழங்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கண்டித்து பெங்களுரூவில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. பிலிகுண்டுலுவில் இருந்து தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு 5 ஆயிரம் கன அடி நீர் செப்டம்பர் 13ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவில் தலையிட விரும்பவில்லை என தெரிவித்து கர்நாடக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரணை செய்ய மறுப்பு தெரிவித்தது.
சட்ட ரீதியாக தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விட வேண்டிய கட்டாயத்திற்கு கர்நாடக அரசு தள்ளப்பட்டு நீர் திறக்கப்பட்டு உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்தும், தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விட மறுப்பு தெரிவித்தும் நேற்று கர்நாடக விவசாய சங்கங்கள், தனியார் அமைப்புகள், ஆட்டோர ஓட்டுநர்கள் சங்கம், அரசியல் கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தின.
முழு அடைப்பு போராட்டம் காரணமாக இரு மாநில எல்லைகளிலும் பதற்றம் நிலவியதால் தமிழ்நாட்டில் சத்தியமங்கலம், ஈரோடு, கோவையில் இருந்து மைசூர், சாம்ராஜ்நகர், கொள்ளேகால் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் தமிழக அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. கர்நாடக வழியாக செல்லும் லாரிகளும் எல்லைப் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டன.
இதன் காரணமாக, தமிழகம் கர்நாடக இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவிரிநீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்திய போராட்டம் தணிந்ததால் இன்று (செப்.27) சத்தியமங்கலத்தில் இருந்து 11 அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் மைசூர், கொள்ளேகால், சாம்ராஜ் நகருக்கு புறப்பட்டன.
தமிழக லாரி ஓட்டுநர்கள் கர்நாடக எல்லைப் பகுதியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்ட நிலையில், பண்ணாரி சோதனைச்சாவடியில் நிறுத்தப்பட்ட சரக்கு வாகனங்களும் கர்நாடகம் வழியாக வடமாநிலங்களுக்கு சென்றன. மேலும், சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடிக்கு புளிஞ்சூர் வழியாக அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதையும் படிங்க:தமிழகத்திற்கான நீரை 5,000-லிருந்து 3,000 கன அடியாகக் குறைத்தது காவிரி ஒழுங்காற்றுக் குழு!