மூளைச்சாவு அடைந்த பள்ளி ஆசிரியை உடல் தானம் நாமக்கல்: திருச்செங்கோடு அருகே வெள்ளக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மனைவி மஞ்சுளா அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மஞ்சுளா கடந்த மூன்றாம் தேதி பள்ளிப்பாளையத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குத் திரும்பும் போது ஆலம்பாளையம் பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார்.
இதனையடுத்து மஞ்சுளா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் மூளைச்சாவு அடைந்ததை உறுதி செய்த மருத்துவர்கள் குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை குணம் செய்ய முடியாத சூழல் இருப்பதாக மருத்துவர்கள் குடும்பத்தினரிடம் தெரிவித்தனர்.
இந்நிலையில் குடும்பத்தினர்கள் ஆசிரியை மஞ்சுளாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். இதன் பின்னர் அறுவை சிகிச்சை மூலம் மஞ்சுளாவின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட கல்லீரல், நுரையீரல், இதயம், தோல் உள்ளிட்ட பல்வேறு உடல் உறுப்புகள் பாதுகாப்பாக எடுக்கப்பட்டுத் தேவைப்படும் பயனாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் ஆசிரியை மஞ்சுளா உடலுக்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி மற்றும் மருத்துவ குழுவினர் அரசின் சார்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர். இதன் பின்னர் அரசு வாகனம் மூலம் சொந்த ஊரான வெள்ளக்காடு பகுதிக்கு ஆசிரியை உடல் அனுப்பி வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஜார்க்கண்டில் உயிரிழந்த மாணவர் மதன்குமார் குடும்பத்திற்கு மு.க.ஸ்டாலின் ரூ.3.லட்சம் நிதியுதவி..உரிய விசாரணை செய்ய ஜார்க்கண்ட் முதலமைச்சருக்கு கடிதம்