தொடர்ச்சியாக பப்ஜி விளையாடி வந்த சிறுவன் அருண் (16) அதனை மறப்பதற்காக மருத்துவர்களின் ஆலோசனை பேரில், கடந்த ஜூன் மாதம் ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி அருகே கள்ளிபாளையத்தில் பெற்றோர் பண்ணை வீடு வாங்கி அவருடன் சேர்ந்து பறவைகள் வளர்த்து வந்துள்ளனர். அங்கு பறவைகளோடு விளையாடினாலும் கூட சிறுவன் பப்ஜி விளையாட்டை மறக்க முடியாமல் தவித்துள்ளார்.
நேற்று (அக். 26) மாலை 6 மணிக்கு பெற்றோர் அத்தியாவசிய பொருள்கள் வாங்க வெளியே சென்றனர். அப்போது அருண் வீட்டில் தனிமையில் இருந்ததால் தற்கொலையால் உயிரிழந்தார். பின்னர் இரவு 9 மணியளவில் வீடு திரும்பிய பெற்றோர், மகன் உயிரிழந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் என்ன செய்வது எனத் தெரியாமல் குழம்பிப்போன தம்பதி இன்று அதிகாலை (அக். 27) 5 மணியளவில் சத்தியமங்கலம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சிறுவனின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச்சென்றனர்.
அங்கு சிறுவனுக்கு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு இன்று காலை 10 மணியளவில் பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து சத்தியமங்கலம் காவல் துறையினர் தற்கொலை என வழக்குப்பதிவு செய்தனர்.
சிறுவனின் பெற்றோர் கோயம்புத்தூர் மாவட்டம் தேவர் வீதியைச் சேர்ந்தவர்கள் கந்தவேல்-ரமாபிரபா தம்பதியினர். முன்னதாக, சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள தனியார் பள்ளியில் அருண் ஒன்பதாம் வகுப்பு படித்துவந்தார். பப்ஜி விளையாட்டில் மூழ்கிய இவர், சென்ற ஆண்டு பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்தியுள்ளார்.