தாளவாடி: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனப்பகுதியில் இருந்து இரவு நேரத்தில் வெளியேறும் 'கருப்பன்' காட்டு யானை பயிர்களை சேதப்படுத்தியது. மேலும் இரவு நேர காவலுக்கு சென்ற விவசாயிகள் இருவரை அந்த யானை தாக்கியதில் உயிரிழந்தனர். இதனால் அச்சம் அடைந்த கிராம மக்கள், காட்டு யானையை உடனடியாக பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.
கருப்பன் யானையை பிடிக்கும் பணி கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. ஆபரேசன் கருப்பு என்ற பெயரில் யானையை பிடிக்கும் பணியில் 3 கும்கி யானைகள் ஈடுபடுத்தப்பட்டன. மருத்துவக்குழுவினர் மயக்க மருந்தை செலுத்தியும், தப்பிய காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. தொடர்ந்து, மயக்க மருந்து செலுத்தினால் அதன் உடல்நிலை பாதிக்கப்படும் என்பதால் கருப்பன் யானையை பிடிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.