ஈரோடு மாவட்டம், பவானியில் உள்ள அந்தியூர் பிரிவில் குறிப்பிட்ட ஒரு சமூகத்துக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் பாவடி நிலத்தில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிலர் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த பாவடி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யாமல் கற்கலை ஊன்றி அச்சமூகத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்நிலையில், பாவடி நிலத்தில் நெடுஞ்சாலை துறைக்கும் இடம் உள்ளது என்று கூறி, கடந்த 23ஆம் தேதி காவல் துறையினர் மூலமாக பாவடி நிலத்தில் சாலையை ஒட்டியுள்ள கற்களை மட்டும் நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றியுள்ளனர். இதனையடுத்து, பிரச்னைக்குரிய பாவடி நிலத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு அந்த சமூகத்தினர் நேற்று இரவு மேற்கூரை அமைக்க சென்றுள்ளனர்.
இதனைத் தடுத்த பவானி காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் சேகருக்கும், கோயிலுக்கு மேற்கூரை அமைக்க வந்த சமூகத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேற்கூரை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தியதால் காவல் துணைக் கண்காணிப்பாளரை அந்த சமூகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் உதயசங்கர் என்பவர் தனது செல்ஃபோனில் வீடியோ பதிவு செய்தியுள்ளார். இதனைக் கண்ட துணைக் கண்காணிப்பாளர் செல்ஃபோனைப் பறித்ததுடன் அந்த நபரை தாக்கியதாகக் கூறப்படுகின்றது.