சென்னை:தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நேற்று (பிப்.1) இரவு டெல்லி புறப்படும் முன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில், “இலங்கையில் 13வது சட்டத்தை விரைவாக அமல்படுத்த வேண்டும் எனத் தமிழக பாஜகவின் நீண்ட கால கோரிக்கை ஆகும். தற்போது இலங்கை சூழல் மாறிக் கொண்டு இருக்கிறது. வடகிழக்கு பகுதியில் உள்ள தலைவர்கள், தமிழர்கள் 13வது அட்டவணையில் உள்ள போலீஸ், வருவாய் ஆகிய 2 அதிகாரங்களைத் தர வேண்டும் என கேட்டு கொண்டு உள்ளனர்.
இலங்கை சென்ற போது ரணில்விக்கரம சிங்கேவை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சந்தித்து விட்டு வந்தார். வெளியுறவு அமைச்சரை சந்தித்து இலங்கையில் வருவாய், காவல்துறை அதிகாரத்துடன் கூடிய 13வது அட்டவணையை விரைவாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக பாஜக சார்பில் கோரிக்கை வைக்க உள்ளோம்” என்றார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு வேட்பாளர் அறிவிக்காமல் இருப்பதாகச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “ஈரோடு இடைத்தேர்தல் எங்களுக்கான தேர்தல் இல்லை. அசுர பலம், பண பலம், படை பலம், ஆள் பலம் எல்லாவற்றுக்கும் மேலாக அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தக் கூடிய திமுகவை எதிர்த்து நிற்க வேண்டும் என்றால் ஒரு வலிமையான வேட்பாளர் நிற்க வேண்டும். வேட்பாளர் அறிவிக்கும் வரை பொறுமையாக இருங்கள்” என பதிலளித்தார்.