ஈரோடு மாவட்டம் அறச்சலூர் பிரதான சாலைப் பகுதியில் அறச்சலூர் காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்தக் காவல் நிலையத்தில் சில ஆண்டுகளாகப் பணியாற்றிவரும் குமாரவேல் என்கிற உதவி ஆய்வாளர் தொடர்ந்து அடாவடி வசூலில் ஈடுபட்டுவருவதாகப் புகார்கள் கூறப்பட்டுவருகின்றன.
இந்த நிலையில் ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக கட்சியின் சார்பில் அறச்சலூர் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரையிடம் கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டன.
மனுக்களை வழங்கிய பாஜகவினர் கூறுகையில், "அறச்சலூர் உதவி ஆய்வாளர் குமாரவேல் இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை நிறுத்தி அடாவடி வசூலில் ஈடுபட்டுவருகிறார்.
இது குறித்து புகார்கள் கூறப்பட்டும் அவர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் அறச்சலூர் விவசாய நிலங்கள் அதிகம் நிறைந்த பகுதியாக இருப்பதால் வேளாண் பொருள்கள் கொண்டுசெல்லும் வாகனங்கள், வாழைத்தார்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை நிறுத்தி அபராதம் வசூலிப்பதாகக் கூறி இரண்டு மடங்கு வசூல்செய்து விடுகிறார்.
இதன் காரணமாகவே விவசாயத் தொழிலாளர்கள் அறச்சலூரிலுள்ள வாழைத் தோட்டங்களுக்கு வந்து வாழைத்தார்களை வெட்டுவதில்லை. இதன் காரணமாக அறச்சலூர், சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள 10-க்கும் மேற்பட்ட வாழைத்தோட்டங்களில் வாழை மரங்கள் தானாக கெட்டுப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள், அப்பகுதி மக்கள் நலன்கருதி காவல் உதவி ஆய்வாளரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கைவிடுத்து மனுக்கள் வழங்கியுள்ளோம். மனுவைப் பெற்றுக்கொண்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்" எனத் தெரிவித்தனர்.