ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா காலமானதை தொடர்ந்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருமகன் ஈவேராவின் தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. அதேபோல அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சிவப்பிரசாத், நாம் தமிழர் கட்சியின் சார்பில் மேனகா, தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் சார்பில் ஆனந்த், ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர்.
பிரதான எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுக, ஓபிஎஸ் - ஈபிஎஸ் என இரண்டு அணிகளாக பிரிந்து இருப்பதால் யார் வேட்பாளர் என்பதில் இழுபறி நீடித்தது. சின்னம் தொடர்பான வழக்கு தீர்ப்பு இன்னும் நிலுவையில் இருக்கும் நிலையில் மேலும் குழப்பமான சூழ்நிலை நீடித்து வந்தது. இந்நிலையில் இந்த இடைத்தேர்தலுக்கு பாரதிய ஜனதா கட்சி ஆதரவளிக்கும் என ஓபிஎஸ் - ஈபிஎஸ் இரண்டு தரப்பினரும் பாரதிய ஜனதா கட்சியினரை நேரில் சந்தித்து ஆதரவு கூறி இருந்தனர்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்களுடன் நடைபெற்ற பல்வேறு ஆலோசனைகளுக்கு பின் நேற்று ரோடு கிழக்கு சட்டமன்ற வேட்பாளராக தென்னரசு அறிவிக்கப்பட்டார். ஓ.பன்னீர் செல்வமும் நேற்று செந்தில் முருகன் என்பவரை தனது அணிக்கான வேட்பாளராக அறிவித்தார். அதன் பின்னரும் பாஜக தனது ஆதரவு யாருக்கு என்ற நிலைப்பாட்டை தெரிவிக்காமல் இருந்து வந்தது.
பாராளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயரில் அதிமுக, பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணியில் இருந்தபோது இதே கூட்டணியில் 2021 சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியை இந்த கூட்டணியின் வேட்பாளராக தமிழ் மாநில காங்கிரஸின் யுவராஜுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் அவர் தோல்வி அடைந்த நிலையில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவேரா வெற்றி பெற்றார்.