உலகில் பல நாடுகளில் பறவைக் காய்ச்சல் பரவி மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் சில மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் நோய் கண்டறியப்பட்டு உள்ளது. கேரள மாநிலத்திலும் சமீபத்தில் இந்தப் பாதிப்பு கண்டறியப்பட்டது. தமிழ்நாட்டில் இந்த நோய் பாதிப்பு இன்னும் கண்டறியப்படவில்லை என்ற போதிலும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்து கேரளாவுக்கு செல்லும் பாதைகளான பண்ணாரி, கடம்பூர் மலைப்பாதை ஆகிய வழித்தடங்களில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. கேரளாவிலிருந்து வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் எஸ். கதிரவன் அனைத்து கால்நடை மற்றும் வனத்துறையினருக்கு பல்வேறு அறிவுரைகளை அரசு துறை அலுவலர்களுக்கு வழங்கினார்.