ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை. இதன் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள இரண்டு லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இந்த அணை தமிழ்நாட்டில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்குகிறது. அணையின் நீர்பிடிப்புப் பகுதியான நீலகிரி மாவட்டம், வடகேரளாவின் சில பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக கடந்த மாதம் நீர்மட்டம் 102 அடியை எட்டிய நிலையில், தற்போது மீண்டும் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவான 105 அடியை எட்டியது.