வேகமாக சரியும் பவானிசாகர் அணை நீர்மட்டம்: நீர்வரத்து 352 கன அடி: நீர் திறப்பு 3400 கன அடி! ஈரோடு:பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ள நிலையில் அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் உள்ளது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 105 அடியாக உள்ளது. சமீபத்தில் 68 ஆண்டுகள் நிறைவு செய்த பவானிசாகர் அணைக்கு 69வது வயது தொடங்கியுள்ளது. பவானிசாகர் அணையால், தமிழ்நாட்டில் வறட்சி நிலவிய காலத்தில் கூட தண்ணீர் பிரச்சினை இல்லாத மாவட்டமாக ஈரோடு மாவட்டம் மாறியிருந்தது.
ஆண்டுதோறும் நன்செய் மற்றும் புன்செய் பாசனத்துக்கு கீழ்பவானி வாய்க்காலில் இருந்து தண்ணீர் திரக்கப்படும். இந்த தண்ணீர் திறப்பு காரணமாக 2 லட்சத்து 7 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஒரு கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாயத்துக்கும் முக்கிய பங்காற்றும் இந்த பவானிசாகர் அணை கடந்த 1955ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
இதையும் படிங்க: கோயில் அறங்காவலர் நியமனத்தில் முக்கிய முடிவு... இந்துசமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் வட கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 352 கன அடியாக மட்டுமே இருந்தது. அதே சமயம் பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலில் 2300 கன அடி தண்ணீரும், பவானி ஆற்றில் 1100 கன அடி தண்ணீரும் என மொத்தம் 3400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
நீர்வரத்து குறைந்துள்ள நிலையில் அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 80.02 அடியாகவும், நீர் இருப்பு 15.6 டிஎம்சி ஆகவும் உள்ளது.
இதையும் படிங்க: "வழக்கறிஞர் அறையில் நடந்தாலும் சுயமரியாதை திருமணம் செல்லும்" - உச்ச நீதிமன்றம் கூறுவது என்ன?