ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. இந்த அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டது. இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதிபெறுகின்றன.
இந்நிலையில், தற்போது நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்துவருவதால் பில்லூர் அணையில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. பில்லூர் அணையிலிருந்து வினாடிக்கு 20,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் அதிகரித்துவருகிறது.
இதனால் அணையின் நீர்மட்டமும் நாள்தோறும் ஒரு அடியாக உயர்ந்துவருகிறது. கடந்த 3ஆம் தேதி 86 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் தற்போது கிடுகிடுவென உயர்ந்து 88 அடியாக உயர்ந்து நீர் இருப்பு 20.48 டிஎம்சி ஆக உள்ளது. இன்று (ஆகஸ்ட் 5) காலை 9 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 88 அடியாகவும், நீர்வரத்து வீனாடிக்கு 14 ஆயிரம் 389 கனஅடியாகவும் உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
மேலும், பில்லூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீர் சித்தன் குட்டை, அய்யம்பாளையம் வழியாக பவானி ஆற்றுக்கு வருவதால், ஆற்றங்கரையோர பகுதி மக்கள், பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:பவானி காவல் ஆய்வாளருக்கு கரோனா - காவல் நிலையம் மூடல்