ஈரோடு: முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும், பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில் அணையில் போதிய நீர் இருப்பு உள்ளதால், கீழ்பவானி வாய்க்காலில் 1 லட்சத்து 3,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில், கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் போக நெல் சாகுபடிக்கு நீர் திறக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி, ஈரோடு அருகே கீழ்பவானி வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்புக் காரணமாக, பாசனத்திற்குத் திறக்கப்பட்ட நீர் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கரை உடைப்பு சரி செய்யப்பட்டு, கடந்த சில தினங்களுக்கு முன்பு, கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு மீண்டும் விநாடிக்கு 200 கனஅடி வீதம் நீர் திறக்கப்பட்டது.