ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியாகவும் அதன் நீர் இருப்பு 32.8 டிஎம்சியாகவும் உள்ளது. அணை மூலம் இரண்டு லட்சத்து 47 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணைக்கு முக்கிய நீர்வரத்தாக பவானிஆறு, மாயாறு உள்ளன.
அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான தெங்குமரஹாடா, நீலகிரி, கேரளாவின் ஒரு பகுதியிலும் பெய்த பலத்த மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் 96 அடியாக இருந்த நீர்மட்டம் கடந்த அக். 22ஆம் தேதி 102 அடியை தொட்டது. அதனைத் தொடர்ந்து ஒரே சீராக 102 அடியாக நீடித்த நிலையில் அணையின் நீர்மட்டம் நேற்று 104.65 அடியை எட்டியது. 1979ஆம் ஆண்டுக்கு பிறகு நேற்று 104.65 அடியை எட்டியுள்ளது.
தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய மண்அணை என்பது மட்டுமின்றி தமிழ்நாட்டில் அதிக கொள்ளளவு கொண்ட இரண்டாவது அணை என்பது பவானிசாகர் அணையின் சிறப்பு. இந்த அணை 10.34 கோடி செலவில் 1955ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அணையின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது கல்லணை. இதன் நீர்ப்பிடிப்பு பகுதி 1620 சதுர மைல்கள், நீர் தேக்கப்பகுதி 30 சதுர மைல்கள்.