ஈரோடு:நீலகிரி மாவட்டத்தில் அவலாஞ்சி, அப்பர் பவானி ஆகிய நீர்ப்பிடிப்புப்பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக பில்லூர் அணை முழுக் கொள்ளளவை எட்டியது. இதனால் அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. பவானி ஆறும் மாயாற்று நீரும் அணைக்கு வந்து சேருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஜூலை 5ஆம் தேதி 83 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து 100 அடியை எட்டியது. 105 அடி நீர்மட்ட உயரம் கொண்ட அணை தற்போது கடல்போல் காட்சியளிக்கிறது.
அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரத்து 149 கனஅடியாகவும் பவானி ஆற்றில் நீர் வெளியேற்றம் 105 கனஅடியாகவும் நீர் இருப்பு 28.72 டிஎம்சியாகவும் உள்ளது. ஜூலை மாத இறுதி வரை 100 அடி மட்டுமே தேக்கி வைக்க முடியும் என்ற நிலையில் தற்போது அணையின் நீர்மட்டத்தை 102 அடி வரை உயர்த்துமாறும் பின்னர் இந்த நீரை குடிநீர் மற்றும் பாசனத்துக்கு பயன்படுத்துமாறும் தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.