ஈரோடு:பெங்களூர் திலக் நகரில் அல்கொய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த அக்தர் உசேன் லஸ்கர் என்பவரை கடந்த 24 ஆம் தேதி கைது செய்த காவல்துறையினர், அவரிடம் தீவிரமாக விசாரித்தனர். அப்போது அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், சேலத்தில் பதுங்கி இருந்த அப்துல் அலி ஜூபா என்பவரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.
பின்னர் அப்துல் அலி ஜூபா அளித்த தகவலின் பேரில், ஈரோடு மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் என்.ஐ.ஏ அலுவலர்கள் அதிரடியாக உள்ளே நுழைந்து வீட்டில் இருந்த ஐந்து பேரிடம் விசாரணை நடத்தினர். இதில் ஒருவரை மட்டும் வேறு இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து சோதனை நடத்தி, வீட்டில் இருந்த தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்பட்டு வந்த ஸ்மார்ட் போன், லேப்டாப், டைரிகள், சிம்கார்டுகள், வங்கி பாஸ் புக் உள்ளிட்ட ஆவணங்களையும் கைப்பற்றினர். இதனிடையே அப்பகுதியில் பலத்த துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.