ஒரு ரூபாய் நோட்டு, ரூ.10 நாணயங்களை வாங்க மறுக்கும் வங்கிகள்; சமூக ஆர்வலர் புகார் ஈரோடு: சித்தோடு பகுதியைச் சேர்ந்த மணிக்கண்ணன், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு இயக்கத்தின் நிர்வாகியாகவும், சமூக ஆர்வலராகவும் உள்ளார். மேலும் இவர் அப்பகுதியில் சைக்கிளில் தேநீர் வியாபாரம் செய்து வருகிறார்.
இவர் தேநீர் விற்பனை மூலம் வாடிக்கையாளர்கள் அளித்த 1 ரூபாய், 2 ரூபாய் நோட்டுகளையும், 10 ரூபாய், 20 ரூபாய் நாணயங்களையும் யாரும் வாங்காததால் சேகரித்து வைத்துள்ளார். இரண்டு ஆண்டுகளாக இவ்வாறு தன்னிடம் சேர்ந்த நோட்டுகளையும் நாணயங்களையும் காய்கறி சந்தை, பேருந்து, மளிகை கடை எனப் பல இடங்களில் மாற்ற முயற்சித்தும் முடியாததால் வங்கியில் செலுத்த சென்றுள்ளார்.
ஆனால், வங்கிகளிலும் அவற்றை பெற மறுத்து தன்னை அலைக்கழிப்பதாக கூறிய மணிக்கண்ணன், நோட்டுகள் மற்றும் நாணயங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குப் புகார் அளிக்க வந்தார். யாரும் வாங்காத தோட்டுகளை ஆட்சியரிடம் ஒப்படைக்கப் போவதாக தெரிவித்தார். அவரது மனுவை பெற்ற அதிகாரிகள் வங்கிகளுக்கு அறிவுறுத்தல் வழங்குவதாக கூறி அவரை அனுப்பி வைத்தனர்.
அரசால் வெளியிடப்பட்ட நாணயங்களையும், ரூபாய் நோட்டுகளையும் வாங்க மறுப்பவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124 A-ன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கவும், இது குறித்த அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும் எனவும் மணிக்கண்ணன் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க:நெல்லை அரசு பன்னோக்கு மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளர்கள் தர்ணா