தருமபுரி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் தனியார் நடுநிலைப் பள்ளியில் 85 மாணவ மாணவிகள் பயின்றுவருகின்றனர். இப்பள்ளியில் இயற்கை வேளாண்மை குறித்து மட்டுமே பயிற்சி அளித்துவருவதுடன் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் சிறிது நிலம் ஒதுக்கப்பட்டு அதில் அவர்களே விவசாயமும் செய்துவருகின்றனர்.
இந்நிலையில் இயற்கை வேளாண்மை குறித்தும், விவசாயிகளின் பயன்கள் குறித்தும் மாணவர்கள் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில் அவர்களுக்கு மிதிவண்டிப் பயணம் ஒன்றை பள்ளி சார்பாக ஏற்பாடு செய்துள்ளனர். இப்பயணம் தருமபுரியில் தொடங்கி மேட்டூர், அந்தியூர், கோபிசெட்டிபாளையம் வழியாக மேட்டுப்பாளையம் வரை செல்வதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விழிப்புணர்வுப் பயணத்தில் 15 மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று பயணத்தை தொடங்கியுள்ளனர். இப்பயணம் 18ஆம் தேதி தொடங்கி இன்று ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே புதுக்கரைப்புதூர் பகுதியில் அமைந்துள்ள அருணாசலம் என்ற இயற்கை வேளாண்மை முன்னோடி விவசாயி தோட்டத்திற்கு வந்து சேர்ந்துள்ளனர். அங்கு மாணவ மாணவிகளுக்கு ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து இயற்கை விவசாயி அருணாசலம் மாணவ மாணவிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்தும், இயற்கை வேளாண்மைக்கு தேவையான மூலப்பொருள்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.