ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் கடந்த ஒரு மாதகாலமாக தொடர்மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக இப்பகுதியில் உள்ள குளம், குட்டைகள் நிரம்பியதோடு ஓடைகள், பள்ளங்களில் மழைநீர் ஓடுகிறது.
சத்தியமங்கலம் நகராட்சியில் உள்ள கொளத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளியை ஒட்டி நகராட்சிக்குச் சொந்தமான கைபம்பு உள்ளது. தொடர்மழை காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் இந்த கைபம்பில் இருந்து குடிதண்ணீர் தானாக பொங்கி வழிந்து வெளியே கொட்டியது. இது அப்பகுதியினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
நிலத்தடி நீர்மட்டம் அதிகரிப்பால் கைபம்பிலிருந்து குடிநீர் வெளியேற்றம்! கைபம்பில் தண்ணீர் வெளியேறுவது குறித்து சத்தியமங்கலம் நகராட்சி அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற ஊழியர்கள் தண்ணீர் வீணாகுவதைச் சரி செய்தனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கொளத்தூர் கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக சத்தியமங்கலம் நகராட்சி சார்பில் 200 அடி ஆழத்திற்கு ஆழ்குழாய் கிணறு அமைத்து கைபம்பு பொருத்தப்பட்டது. தற்போது பெய்த பலத்த மழை காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயத்திற்கும் குடிநீர் தேவைக்கும் பூர்த்தியாகியுள்ளது என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
மேலும் படிக்க:ஈரோட்டில் களைகட்டிய தீபாவளி துணி விற்பனை!