தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோட்டில் ஜோதிடர் கல்லால் அடித்துக் கொலை! - ஈரோடு அண்மைச் செய்திகள்

ஈரோடு : ஆப்பக்கூடல் அருகே திருமணத்தை மீறிய உறவில் ஈடுபட்ட ஜோதிடர், பெண்ணின் உறவினர்களால் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட ஜோதிடர்
கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட ஜோதிடர்

By

Published : Apr 10, 2021, 10:13 PM IST

ஈரோடு மாவட்டம் ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்த ஜோதிடர் பழனிசாமி(57). இவரிடம் ஆப்பக்கூடல் அருகே உள்ள மல்லியூர் பகுதியை சேர்ந்த சரோஜா சிலவருடங்களுக்கு முன்பு ஜாதகம் பார்க்க வந்துள்ளார். சரோஜாவிற்கு திருமணமாக ஒரு மகள், மகன் உள்ளனர்.

ஜாதகம் பார்க்க வந்த சரோஜா, பழனிசாமி சந்திப்பு நாளடைவில் தனிப்பட்ட பழக்கமாக மாறியுள்ளது. அதற்கு பின்னர் சரோஜாவை தனிமையில் சந்திப்பதற்காக ஜோதிடர் பழனிசாமி அடிக்கடி சரோஜாவின் வீட்டிற்குச் சென்று வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த சரோஜாவின் மாமியார், மகள், உறவினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் (ஏப்.8) ஆப்பக்கூடல் அருகேயுள்ள முத்தாலம்மன் கோயிலில் ஊர்மக்கள் முன்னிலையில், சரோஜாவின் சொத்து விபரம், ஜோதிடர் பழனிசாமியுடன் இருந்து வரும் பழக்கம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. பேச்சுவார்த்தைக்கு பின்னரும் ஜோதிடருடனான பழக்கத்தை சரோஜா கைவிடவில்லை.

தொடர்ந்து சரோஜாவின் வீட்டிற்கு வந்த பழனிசாமியை அவரது உறவினர்கள் கண்டித்துள்ளனர். இதில் பழனிசாமிக்கும், சரோஜாவின் உறவினர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரோஜாவின் உறவினர்களை பழனிசாமி தாக்கியுள்ளார்.

இதனால் கோபமடைந்த சரோஜாவின் உறவினர்களான சென்னாநாயக்கர், கோவிந்தராசு, சூரியபிரகாஷ், பிரபு, குமார், சின்னம்மாள் ஆகியோர் ஜோதிடர் பழனிசாமியை துரத்தி சென்று கல்லால் அடித்து தாக்கி அவரது முகத்தைச் சிதைத்துள்ளனர். இதில் ஜோதிடர் பழனிசாமி இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து ஆறு பேரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

இதையும் படிங்க : ’உலகைத் துற, சிவனை நினை’ - ஈஷாவில் ஐக்கியமான கங்கனா!

ABOUT THE AUTHOR

...view details