பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் செய்தியாளர்கள் சந்திப்பு ஈரோடு:செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது பாரதிய ஜனதா கட்சியின் அழுத்தம் காரணம் இல்லை எனவும், உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல் படி தான், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை மூடியது பெரிய உள் அரங்கு கடைகளைத் திறப்பதற்குத் தான் எனவும் பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் பாஜகவின் 9 ஆம் ஆண்டுக் கால ஆட்சியை விளக்கும் விதமாக (9 Years of PM Modi Govt) வரும் 30 ஆம் தேதி ஒரு லட்சம் பேர் வரை பங்கேற்கும் வகையில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான கால் கோள் விழா இன்று (ஜூன் 22) பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் முன்னிலையில் நடைபெற்றது.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 9 ஆண்டுக்கால ஆட்சியை எட்டிய நிலையில், பாஜகவின் ஆட்சியில் மக்களுக்காகச் செய்த நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல சாதனைகளை விளக்கும் விதமாக நாடெங்கும் அக்கட்சியினர் பொதுக்கூட்டங்கள் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளிலும் இந்த சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இதன் ஒருபகுதியாக, ஈரோடு அடுத்துள்ள சோலார் அருகே புதிய பேருந்து நிலையம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் 9 ஆண்டுக் கால ஆட்சியின் சாதனைகளை விளக்கும் விதமாகவும், தமிழ்நாட்டில் திமுக ஆட்சியின் வேதனைகளை எடுத்துக்கூறும் விதமாகவும் வரும் 30ஆம் தேதி மாபெரும் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, இந்த பொதுக்கூட்டத்திற்கான கால்கோள் விழா இன்று நடைபெற்றது. இதில், அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி.கே.சரஸ்வதி உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ற நிலையில், பூஜைகளுடன் கால்கோள் விழா நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், '30ஆம் தேதி அண்ணாமலை பங்கேற்கும் சாதனை விளக்கப் பொதுக்கூட்ட விழாவிற்கான கால்கோள் விழா இன்று நடைபெற்றதாகவும், செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதற்குப் பாரதிய ஜனதா கட்சியும் அண்ணாமலையும் நரேந்திர மோடியும் காரணம் எனக் குற்றம் சாட்டுவது தவறானது என்றும் தெரிவித்தார். ஏற்கனவே, அமலாக்கத்துறையின் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டு அதில் ஆஜராகாததால் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி தான், அவர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதியில் ஒன்றே ஒன்றை மட்டும் நிறைவேற்றியுள்ளதாகவும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் செந்தில் பாலாஜியைக் கைது செய்வோம் எனவும் அவர் கூறியிருந்ததாகவும், அப்போது கூறியது இப்போது நடைபெற்றுள்ளதாகவும் விமர்சித்தார். மேலும் பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூடுவது உள் அரங்கிற்குள் பெரிய பெரிய கடைகளை அமைப்பதற்காகத்தான் டாஸ்மாக் கடைகளை மூடுவதாகக் குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: குஷ்பூவால் மனஉளைச்சல் : நெல்லைவாசிகள் பரபரப்பு புகார்