ஈரோடுமாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சாலைகளில் காய்கறி, பழங்கள், உணவு வகைகள் மற்றும் பூ வியாபாரம் செய்து வரும் 127 சாலையோர வியாபாரிகளுக்கு தேவையான விற்பனை வண்டிகளை, தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் திட்டத்தின்கீழ் ரூ.1.05 கோடி மதிப்பீட்டில் வழங்க அரசால் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக இன்று 40 சாலையோர வியாபாரிகளுக்கு விற்பனை வண்டி வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, 40 சாலையோர வியாபாரிகளுக்கு வண்டிகளை வழங்கினார்.
அப்போது 10 காய்கறி வண்டி விற்பனை வியாபாரிகள், 10 பழ விற்பனை வண்டி வியாபாரிகள், 5 உணவு வகைகள் விற்பனை வண்டி வியாபாரிகள், 15 பூ விற்பனை வண்டி வியாபாரிகள் ஆகிய 40 சாலையோர வியாபாரிகளுக்கு வண்டிகள் வழங்கபட்டன.
இதனைத்தொடர்ந்து ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மக்கள் சேவை மையத்தை அமைச்சர் முத்துசாமி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மேயர் நாகரத்தினம் மற்றும் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி ஆகியோர் கலந்து கொண்டனர்.