ஈரோடு மாவட்டம், அவல்பூந்துறையில்பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் வேளாண்மை திருத்தச் சட்டம் குறித்த கலந்தாய்வும் கருத்துப் பரிமாற்றக் கூட்டமும் நடைபெற்றது. அனைத்து விவசாயச் சங்கங்களும் விவசாயிகளும் கலந்து கொள்ளும் வகையில் நடத்தப்பட்ட இந்தக் கூட்டத்தில், பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அண்ணாமலை, ”இது போன்ற ஆரோக்கியமான கருத்தரங்குகள் சிறப்பானவை. மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களை விவசாயிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்தச் சட்டத்திற்கு அவர்கள் வரவேற்பு தெரிவிக்கின்றனர்” என்றார்.
அதிமுகவுக்கும் பாஜகவுக்குமான கூட்டணி தெளிவாக நேர்கோட்டுப் பார்வையில் சென்று கொண்டிருக்கிறது எனத் தெரிவித்த அவர், பல கொள்கைகள் இரண்டு கட்சிக்கும் ஒத்துப் போவதாகவும், சில கொள்கைகளில் மாறுபாடு இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக பங்கு வகிக்கிறது என்றும், ஆரோக்கியமான முறையில் இக்கூட்டணி சென்று கொண்டிருக்கிறது என்றும் அண்ணாமலை திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு எதிரான போராட்டங்கள் குறித்த கேள்விக்கு, “திமுகவின் போராட்டம் முட்டாள்தனமானது. எந்த சம்பந்தமும் இல்லாமல் திமுக இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. துணைவேந்தரின் கடித விவகாரம் தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித் துறைக்கும் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான பிரச்னை. இதனை அரசியலாக்கக்கூடாது” என பதிலளித்தார்.
பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை பேசிய காணொலி தொடர்ந்து, ”சிபிஐ , நீதிமன்றம் இரண்டும் பாஜக ஆட்சியில் தனித்தன்மையாக, சுதந்திரமாக செயல்படுகிறது. 2ஜி வழக்கு வேகமெடுப்பதால், கனிமொழிக்கு பயம் வந்துள்ளது. எனவே அவர் பயத்தில் உளறி வருகிறார்” என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
இதையும் படிங்க:அண்ணா பல்கலைக்கழக ஆர்ப்பாட்டம்: காவல் துறையுடன் மோதலில் ஈடுபட்ட திமுக!