ஈரோடு: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 3ம் கட்ட நடைபயண யாத்திரையைத் திருப்பூரில் தொடங்கிய நிலையில், தற்போது ஈரோடு மாவட்டத்தில் யாத்திரை மேற்கொண்டு வருகிறார், அதன் ஒரு பகுதியாக கோபிசெட்டிபாளையம் பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள் யாத்திரை' நடைப்பயணத்தைத் துவக்கி மக்களைச் சந்தித்தார்.
இதனைத் தொடர்ந்து அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழகத்தில் புதுவிதமான அரசியலை மக்கள் பார்க்க வேண்டும். ஒவ்வொரு தொகுதிகளிலும் வெளிப்படையாகத் தெரிகின்றது மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்று. மக்களுக்கு இந்த நடைமுறை அரசியல் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதேபோல பிரதமரின் ஒன்பது ஆண்டுகால ஆட்சி கடைக் கோடியில் உள்ளவர்கள் வரை சென்று மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது" என்றார்
அதிமுகவினர் அண்ணாமலையை விமர்சித்துப் பேசுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "எந்த மாங்காய் மரம் சுவையாக உள்ளதோ அதில் தான் கல் எடுத்து அடிப்பார்கள் என்பதைப் போலத்தான். கல்லடி பட்டு தான் மாங்காய் மரம் சுவையான மாம்பழங்களைக் கொடுக்கின்றது. விமர்சனத்திற்கு எப்போதும் அண்ணாமலை அஞ்சுவது கிடையாது.
அண்ணாமலைக்கு என்று தனி பாணி அரசியல் உள்ளது. அதை நான் ஒரு பெட்டிக்குள் அடக்க விரும்பவில்லை, தமிழகத்தில் முன்பு இருந்த அரசியல்வாதிகள் இதுபோன்று தான் அரசியல் செய்தார்கள் என்றால் அதனை அண்ணாமலை செய்ய விரும்பவில்லை, என்னுடைய அரசியல் ஒரு மாற்று அரசியல். தமிழகத்தில் நடந்து வரும் எந்த அரசியலும் மக்களுக்குப் பிடிக்கவில்லை.