திருச்சி விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பேசிய அவர், 'இன்றைய பட்ஜெட் பிரதமர் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியபடி, 25 ஆண்டுகளுக்கான அமிர்தகால பட்ஜெட்டுக்கு இது ஒரு அச்சாணியாக இருக்கும். அதில் உள் கட்டமைப்புக்காக 10 லட்சம் கோடி ரூபாய் வரை மத்திய அரசு முதலீடு செய்யதுள்ளது.
நகர்ப்புற வேலைவாய்ப்பு நிலவரத்தில், கணக்கெடுப்பின்படி கரோனா கால கட்டத்தில் இருந்து முழுமையாக நாடு மீண்டு, அடுத்தகட்ட வளர்ச்சிக்கு சென்றுள்ளதை காட்டுகிறது. ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவது வேட்பாளரை நியமிப்பது போன்றவை தொடர்பாக கூட்டணி கட்சித் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
சற்று பொறுமையாக இருங்கள். திமுக கூட்டணியைப் பொறுத்தவரை எவ்வளவு பணம் கொடுக்கலாம் என்ற பேச்சுக்கள் தான் அடிபடுகிறது. அந்த கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தரப்பில் மக்களுக்கு என்ன செய்வோம், என்பது பற்றிய எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இடைத்தேர்தலின்போது ஆளுங்கட்சியினர் பண பலத்தையும் அதிகார அரசியல் இயந்திரத்தையும் தவறாகப் பயன்படுத்துகின்றனர்.
அவற்றை எதிர்கொள்ளும் வகையில் பலமான வேட்பாளரை நிறுத்த வேண்டும். நாட்டை ஆட்சி செய்யும் பாரதிய ஜனதா கட்சியில் பல கட்சிகள் இணைந்து இருக்கின்றன. தமிழ்நாட்டில் பல கட்சிகளுடன் கூட்டணியில் இருந்தாலும் மாநில அளவிலான அந்தஸ்தை எதிர்பார்க்கும் நிலையில் இருக்கிறோம். தமிழ்நாட்டில் சிலை கலாசாரம் அனைத்துப்பகுதிகளிலும் ஊடுருவி இருக்கிறது. போட்டி போட்டு சிலை வைக்கின்றனர்.