ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு இளைஞர்கள் எழுச்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு ஈரோடு வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் ராயல். கே. சரவணன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, 'கிஷான் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை, 32 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது.
பாஜக, அதிமுக இடையே கூட்டணி தர்மம் ஒன்று உள்ளது. இரண்டு கட்சிகளுக்கும் இடையில் கொள்கையில் வேறுபாடு உள்ளதால், கூட்டணியில் உள்ளோம். ஒரே கொள்கை இருந்தால், ஒரே கட்சியாக தான் இருக்க வேண்டும்.
மும்மொழி கொள்கையைப் பொறுத்தவரையில், மத்திய மாநில அரசுகள் மொழியை தேர்வு செய்ய வேண்டியது இல்லை. அந்தந்த மாவட்ட நிர்வாகமே தேர்வு செய்யலாம். மத்திய அரசு இந்தியை கட்டாய மொழியாக அறிவிக்கவில்லை. திமுக தலைவர்கள் நடத்தும் 47 பள்ளிகளில் தான் இந்தி கட்டாயமாக திணிக்கப்பட்டுள்ளது.
மேக தாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை மதித்து மத்திய அரசு நல்ல முடிவு தரும்' என்றார்.