தமிழகத்தில் உள்ள 11 அமைச்சர்களின் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது ஈரோடு :பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அவரது 3ஆம் கட்ட நடைபயணத்தை திருப்பூரில் தொடங்கிய அண்ணாமலை, நேற்று (அக்.18) ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நடைபயணத்தை மேற்கொண்டார். இவற்றை மத்திய இணை அமைச்சர் வேல்முருகன் துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, நடைபயணத்தில் அண்ணாமலை பேசியதாவது, “பாஜக ஆட்சியில் 10 ஆண்டு காலத்தில் தனி மனித வருமானம் அதிகரித்துள்ளது. ஏழை என்ற சாதி இருக்கக்கூடாது என்ற அடிப்படையில், மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடைகளுக்கு கொள்முதல் செய்யப்படும் சாராய தயாரிப்பு நிறுவனங்கள் நடத்துபவர்கள் திமுகவினர். நீலகிரி எம்பி ஆ.ராசா, தொகுதிக்கு சுற்றுலா வருவதுபோல் வந்து செல்கிறார். நாடாளுமன்றத் தேர்தலில் ஆ.ராசாவை அப்புறப்படுத்த வேண்டும்.
மேலும், பிரதமருடன் 69 அமைச்சர்கள் உள்ளனர். குண்டூசி அளவிற்குக் கூட ஊழல் இல்லை. ஆனால், தமிழகத்தில் 35 அமைச்சர்கள் உள்ளனர். அவர்களில் 11 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. திமுக அமைச்சர்கள் ஒருவர் கூட மக்களின் அன்பை பெறவில்லை. மகளிர் உரிமைத் தொகை முழுமையாக வழங்கவில்லை. பால் விலை திமுக ஆட்சியில் 5 முறை உயர்த்தப்பட்டுள்ளது. மின் கட்டணம், சொத்து வரி உயர்வு மக்களை பாதித்துள்ளது. குடும்ப ஆட்சி கோபாலபுரத்தில் ஆரம்பித்து, கீழ்மட்டம் வரை நடைபெறுகிறது.
பிரதமர் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. தி.மு.கவினர் சென்னையில் மேடை போட்டு 33 சதவீத இடஒதுக்கீடு, நாடகம் என்று சொல்கிறார்கள். சத்தியமங்கலத்தில் மல்லி, முல்லை பூ சாகுபடி நடைபெற்று வருகிறது. திமுக ஆட்சியில் பூக்கள் விற்பனை பாதித்துள்ளது.
மேலும், ஈரோடு மாவட்டத்தில் தேசிய மஞ்சள் வாரியம் வேண்டும் என்ற விவசாயிகள் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு மஞ்சள் வாரியம் அறிவித்துள்ளது. பாஜக அரசு ஈரோடு மாவட்டத்தில் 37,000 குடும்பங்களுக்கு வீடு கட்டி கொடுத்துள்ளது. இதேபோல் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு, தனிநபர் இல்ல கழிப்பறைகள், விவசாயிகள் கிசான் சம்மான் நிதி என பல்வேறு திட்டப் பணிகள் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திற்கு திமுக அறிவித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. ஈரோடு மாவட்டத்தில் 3 அமைச்சர்கள் இருந்தும் பிரயோஜனமில்லை.
நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் பல்வேறு பிரச்னைகளை சரி செய்து வருகிறோம். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், இந்த தொகுதியில் அலுவலகம் அமைத்து மக்கள் பணி மேற்கொண்டு வருகிறார். நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் பாஜகவிற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று கூறினார்.
இதையும் படிங்க:"இனி 234 தொகுதியும் எங்க லியோ ஆட்சி தான்" - விஜய் ரசிகர்கள் பேனர்.. கோவையில் போலீஸ் கெடுபிடி!