ஈரோட்டை சேர்ந்தவர் குழந்தையம்மாள் (69). இவர் சுதந்திர தினத்தன்று பிறந்ததன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று கொடிகளை மற்றவர்களுக்கு இலவசமாக வழங்குவது வழக்கம். இதனை 43 ஆண்டுகளாக தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.
ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்டமாக இருந்த காங்கேயத்தில் பிறந்த குழந்தையம்மாள், பிழைப்புக்காக தனது சிறு வயதிலேயே ஈரோடு நகரத்திற்கு வந்து சேர்ந்துள்ளார். தற்போது ஈரோடு மாவட்டம் நாதக்கவுண்டன்பாளையத்தில் தனது வருவாயில் சொந்தமாக கட்டிய சிறிய வீட்டில் கணவருடன் வாழ்ந்து வருகிறார்.
இவர் சிறிய வயதில் தந்தையுடன் சேர்ந்து திருவிழாவில் தற்காலிக கடைகளை அமைத்து குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்கள், பொம்மைகளை விற்பனை செய்து வந்ததை தந்தையின் இறப்புக்குப் பிறகு, குழந்தையம்மாள் அதனை தொடர்ந்து வருகிறார்.
மீதி நாள்களில் பலூன்கள் உள்ளிட்ட பொருள்களை விற்று தனது வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறார். இவரது கணவர் ஆறுமுகம் தள்ளுவண்டியின் மூலம் சின்ன சின்ன பொருள்களை வீதி வீதியாக சென்று விற்பனை செய்துவருகிறார்.