ஈரோடு : தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் (பிப்.26) அறிவித்தது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் 26ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தன. சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தலைமை மாநில தேர்தல் ஆணையம் முன்னேற்பாடுகளை மேற்கொண்டுவருகிறது.
அந்த வகையில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கதிரவன் தலைமையில் தேர்தல் பணிகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
பின்னர் ஊடகங்களிடையே பேசிய மாவட்ட ஆட்சியர் கதிரவன், “ தேர்தல் தேதி வெளியிடப்பட்ட நாளில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் பின்பற்றப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் 26ஆம் தேதியன்று தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்தது. அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும், பொதுமக்களும் தேர்தல் நடத்தை விதிகளை கடைப்பிடித்து எதிர்வரும் சட்டபேரவைத் தேர்தலை அமைதியாக நடத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
திங்கள் கிழமை தோறும் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், திட்ட முகாம்கள் ஆகியவை சட்டப்பேரவை பொதுத்தேர்தல் முடிவு பெற்ற பின்னரே மீண்டும் நடத்தப்படும். அதுவரை பொது மக்களில் தங்களின் கோரிக்கை மனுக்களை ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள குறைதீர்க்கும் மனுக்களை அளிக்கும் பெட்டியில் போடலாம். அந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்க அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பறக்கும்படை, நிலை கண்காணிப்புக்குழு 24 மணி நேரமும் செயல்படும்.