ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை மற்றும் வீட்டு வசதித்துறை மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துச்சாமி கலந்து கொண்டு 1012 மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் முத்துச்சாமி, ''கோவையில் திமுக மாவட்டச் செயலாளரின் ஆடியோ தவறானது. ஆடியோ சித்தரிக்கப்பட்டவை. இது பற்றி திமுக கட்சி தலைமைக்கும் தெரியப்படுத்தி உள்ளோம். திமுக மாவட்டச் செயலாளர் அவ்வாறு தவறு செய்யும் நபர் இல்லை. ஆடியோவிற்கும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இலாகா மாற்றப்பட்டதிற்கும் எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லை.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ஊழல் புகார் குறித்து தகவல்கள் இன்னும் முழுமையாக எங்களுக்கு வரவில்லை. வரட்டும் வந்தவுடன் எங்களிடம் கேளுங்கள்''என்றார்.
சென்னை உயர் நீதிமன்றம் நேற்று 11 முறைகேடான பார் டெண்டர் வழக்கில் மதுவிலக்கு அமல்படுத்தும் துறையே மது விற்பனை ஆதரிக்கும் துறையாக உள்ளதாக தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு, ''எந்த தவறும் இல்லாமல் மதுவிலக்கு துறை நடக்க வேண்டும் என்பது தான் எங்களது நோக்கம்.
குடிப்பழக்கம் உள்ளவர்களை கேவலப்படுத்தாமல் அவர்களை பழக்கத்தில் இருந்து வெளியே கொண்டு வர வேண்டும். மது ஒழிப்பு குறித்து நாங்கள் சரியான அணுகுமுறையில் கூறினாலும் அது தவறான நோக்கத்தில் தான் வெளி வருகிறது. நாங்கள் கூறுவதில் உள்ள நல்ல நோக்கத்தை வெளியிடுவதில்லை. அதனால் அதனைப் பற்றி பேசவே பயமாக உள்ளது.
எங்களது நோக்கம் மது வியாபாரத்தை பெரிதுபடுத்துவதில் இல்லை. பாட்டில்களால் ஏற்படும் பிரச்னைகளை மனதில் வைத்து தான் டெட்ரா பேக் கொண்டு வர ஆய்வு மேற்கொண்டும், கருத்துகளை கேட்டுக்கொண்டு உள்ளோம். டெட்ரா பேக் குறித்து ஆய்வு செய்த பிறகு இறுதி முடிவை எடுப்போம்'' என அமைச்சர் முத்துச்சாமி கூறினார்
இதையும் படிங்க: மதுபானங்கள் உயர்வுக்கு மகளிர் உரிமைத்தொகை தான் காரணமா? மதுவிலக்கு அமைச்சர் பதில்