ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக தேர்தல் பணி குழு ஆலோசனைக் கூட்டம் கிருஷ்ணம்பாளையம் பகுதியில் நடைபெற்றது. முன்னதாக அங்கு வந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு முறையான அனுமதி பெறவில்லை, எனக் கூறி கூட்டத்தைக் கலைக்கக் கூறினர். கலைக்கவில்லை என்றால் வழக்குப்பதிவு செய்யப்படும் என தேர்தல் பறக்கும் படையினர் எச்சரித்தனர்.
இதனைத் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்த செங்கோட்டையனிடம் அதிகாரிகளிடம் முறையான அனுமதி கடிதம் கொடுப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து, ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், “மக்கள் மாற்றத்தை விரும்புவதாக தங்களிடம் தெரிவிக்கின்றனர். மக்களின் மனநிலை மாறியுள்ளது.
இந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் திருப்புமுனையை ஏற்படுத்தும். மாற்றங்கள் உருவாகின்ற காலம் வெகு தொலைவில்லை. இடம்பெயர்ந்த வாக்காளர்களின் விவரங்களை சரிபார்த்து வருகிறோம். 30 ஆயிரம் பேர் வரை இடம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் எங்குள்ளனர் என விவரங்களை சேகரித்து வருகின்றோம்.