சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா உடல் நலக்குறைவால் கடந்த 4-ம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து அத்தொகுதிக்குப் பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தலை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். இதனால், தொகுதியைத் தக்க வைக்க திமுக - காங்கிரஸ் கூட்டணியும், தொகுதியைக் கைப்பற்றப் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் வியூகம் வகுத்து வருகின்றன.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியே மீண்டும் போட்டியிடும் என திமுக தலைமை அறிவித்துள்ளது. அதோடு, வேட்பாளர் அறிவிப்புக்கு முன்னரே வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடவும் தொடங்கிவிட்டார்.
கடந்த 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த தொகுதி என்பதால் அந்த கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனிடம், அதிமுக முன்னாள் அமைச்சர்கள்(இபிஎஸ் அணி) பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த தொகுதியில் அதிமுக வேட்பாளரைக் களமிறக்கத் திட்டமிட்டு ஜி.கே.வாசனிடம் சம்மதத்தைப் பெற்றுள்ளனர். இதனால், காங்கிரஸ் - அதிமுக நேரடியாக மோதும் நிலை ஏற்பட்டுள்ளது. இடைத்தேர்தல் தொடர்பாக வெள்ளிக்கிழமையன்று சேலத்தில் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார்.
ஓபிஎஸ் நிலைப்பாடு என்ன?
இதனிடையே, சென்னையில் சனிக்கிழமை காலை செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக நாங்கள் வேட்பாளரை நிறுத்த உள்ளோம். ஒருவேளை பாஜக போட்டியிட விருப்பம் தெரிவித்தால் தேசிய கட்சி என்ற முறையில் அவர்களுக்கு ஆதரவு கொடுப்போம்" என கூறினார். ஓபிஎஸ்சின் இந்த நிலைப்பாடு அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் நிலையில், ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தினால் இரட்டை இலை முடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. இது குறித்து பேசிய ஒபிஎஸ், "எந்த காலத்திலும் இரட்டை இலையை முடக்குவதற்கு நான் காரணமாக இருக்க மாட்டேன். இரட்டை இலை முடங்கினாலும் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடத் தயாராக இருக்கிறோம்" என கூறினார். இதன் மூலம் இபிஎஸ்சை எதிர்த்துப் போட்டியிட ஓபிஎஸ் தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது.
அதிமுகவின் கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் ஈபிஎஸ் தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இது குறித்து பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டி என்ற ஓபிஎஸ் நிலைப்பாட்டில் கருத்துச் சொல்ல விரும்பவில்லை. இடைத்தேர்தல் தொடர்பான எங்கள் நிலைப்பாட்டை ஏற்கெனவே கூறிவிட்டோம். யாருக்கு ஆதரவு என்பதில் குழப்பமான மனநிலையில் நான் இல்லை" என கூறினார். ஜி.கே.வாசன் கூறிய இந்த கருத்து எடப்பாடி தரப்பு தான் அதிமுக என்ற கருத்துக்கு வலுசேர்த்துள்ளது. இதனிடையே, ஓபிஎஸ் ஜி.கே.வாசனை சந்தித்து ஆதரவு கோரினார்.
ஓபிஎஸ்சின் இந்த நிலைப்பாடு குறித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "ஈரோடு கிழக்கு தொகுதி
இடைத்தேர்தல் விவகாரத்தில் ஓபிஎஸ் அணியுடன் பேச தயாராக இல்லை. தனிமரமாகி விட்ட பன்னீர்செல்வம் விரக்தியின் வெளிப்பாடாகவே பேசி வருகிறார். அவரை அதிமுகவிலிருந்து நீக்கி பல மாதங்கள் ஆகியுள்ளது. அவர் சுயேச்சையாகப் போட்டியிடலாம்" என கூறினார். ஈபிஎஸ் தரப்பில் இடைத்தேர்தல் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஜெயக்குமார் தலைமையில் தான் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகள் ஒன்று சேர்வதற்கு வாய்ப்பே இல்லாத சூழல் நிலவுகிறது.
இது குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, "ஒபிஎஸ் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர். அவருடைய அறிவிப்புக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. பெரிய குழப்பத்தில் உள்ள ஓபிஎஸ், அனைவரையும் குழப்பத்திற்கு ஆளாக்குகிறார். கட்சி நடவடிக்கை, நீதிமன்ற தீர்ப்பின் படி ஈபிஎஸ் தலைமையில் தான் அதிமுக இயங்குகிறது; எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிற்கு தான் சின்னம் கிடைக்கும்" என கூறினார்.