சென்னை:பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக நாங்கள் வேட்பாளரை நிறுத்த உள்ளோம். வரும் 2026ஆம் ஆண்ட வரை நான் தான் ஒருங்கிணைப்பாளர். தேர்தல் ஆணையத்தில் ஆவணங்களில் அப்படி தான் உள்ளது. தேர்தல் ஆணைத்தின் படிவம் A, B படிவத்தில் கையெழுத்திட நான் தயாராக இருக்கிறேன். ஏற்கனவே உள்ளாட்சி தேர்தலில் நான் கையெழுத்து போட்டிருந்தேன்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது. மேலும், அதன் தீர்ப்பை வைத்து தான் செயல்பட முடியும். கடந்த ஆண்டு ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு சட்டவிரோதமாக நடைபெற்றது. கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு சட்டவிரோதமாக கூட்டப்பட்டதால் நாங்கள் கலந்துக் கொள்ளவில்லை. இடைத்தேர்தல் தொடர்பாக பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கூட்டணி கட்சிகளிடம் ஆதரவை கோருவோம். எங்களிடமும் கூட்டணி கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டுதான் இருக்கின்றனர்.