ஈரோட்டில் கிருத்துவ திருச்சபை நடத்த விடாமல் தடுப்பதாக புகார் ஈரோடு: சென்னி மலையில் புகழ்பெற்ற முருகன் கோயில் மலை அடிவாரப் பகுதியில் கிறிஸ்தவ திருச்சபை நடத்தியது தொடர்பாக நடைபெற்ற பிரச்னையில் வழக்கறிஞரும், கிறிஸ்துவ அமைப்பைச் சேர்ந்தவருமான சரவணன் என்பவர், சென்னி மலையை கல்வாரி மலையாக மாற்றுவோம் என சென்னிமலை பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, சென்னிமலை பேருந்து நிலையம் அருகே அவரின் பேச்சை எதிர்த்து ஒன்று கூடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கறிஞர் சரவணன் உள்ளிட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் அரச்சலூர் பகுதியில் சுமார் 40 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஐ.சி.ஆர்.எம் கிறிஸ்தவ அமைப்பின் சார்பில் திருச்சபை வழிபாடு நடைபெற்று வரும் நிலையில், வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்றைய முன்தினம் (நவ.26) அன்று உள்ளே புகுந்து வழிபாடு நடத்தக் கூடாது எனவும், மாவட்ட ஆட்சியரிடம் முறையாக அனுமதி பெற வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பல்வேறு கிறிஸ்தவ பாதிரியார்கள் மற்றும் அமைப்பினர் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய வழக்கறிஞரும், கைதாகி சிறையில் இருந்து தற்போது வெளியே வந்துள்ள சரவணன் பேசுகையில், அரச்சலூர் பகுதியில் கிறிஸ்தவ வழிபாடு நடத்த விடாமல் மதவாத சக்திகள் தடுப்பதாகவும், 40 ஆண்டுகளாக சொந்த இடத்தில் வழிபாடு நடத்தி வந்த தங்களை வருவாய்த்துறையினர் அத்துமீறி உள்ளே நுழைந்து வழிபாடு நடத்த அனுமதி பெற்று வர வேண்டும் என கூறினார்.
அதன் அடிப்படையில், நேற்று (நவ.27) மாவட்ட ஆட்சியரைச் சந்தித்த பொழுது எந்தவிதமான பதிலையும் அளிக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருவதாகவும், தாங்கள் எந்த மதத்திற்கும் எதிரானவர்கள் இல்லை, ஆனால் தங்களை மதவாத சக்திகள் தடுப்பதாகவும், கிறிஸ்தவர்களுக்கு உரிய அனுமதி வழங்கப்படவில்லை எனவும், எனவே தங்களை கருணைக் கொலை செய்ய வேண்டும் எனவும் கூறினார்.
முன்னதாக, முருகன் கோயிலாக இருக்கக்கூடிய சென்னி மலையை கல்வாரி மலையாக மாற்றுவோம் என கூறிய கிறிஸ்துவ வழக்கறிஞர் சரவணன், தற்போது நாங்கள் எந்த மதத்திற்கும் எதிரானவர்கள் இல்லை என கூறினார்.
இதையும் படிங்க:பிரபல தனியார் உணவக சாப்பாட்டில் கரப்பான் பூச்சி..! உணவை சாப்பிட்ட பெண்களுக்கு வாந்தி மயக்கம்! நடவடிக்கை என்ன?