திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து தமிழ்நாடு முழுவதும் துப்பாக்கிகளை வைத்திருப்போரின் எண்ணிக்கை, துப்பாக்கி உரிமத்தை முறையாக பெற்றுள்ளவர்கள் எண்ணிக்கை, துப்பாக்கி உரிமம் பெற்று துப்பாக்கியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஆகியவை குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
மேலும் துப்பாக்கி உரிமைதாரர்களுக்கான அறிவுரை கூட்டங்களும் நடத்தப்பட்டு, உரிமம் பெற்றவர்கள் துப்பாக்கி பயன்படுத்தும் முறை குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஈரோடு மாநகர சரகத்திற்குட்பட்ட நான்கு காவல் நிலையங்களை சேர்ந்த துப்பாக்கி உரிமைதாரர்களுக்கான அறிவுரை கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது.
மாநகர துணைக் கண்காணிப்பாளர் ராஜூ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் காவல் ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள் மற்றும் துப்பாக்கி உரிமைதாரர்கள் கலந்து கொண்டனர். மாநகரத்தில் உள்ள நான்கு காவல்நிலைய பகுதிகளிலும் 400 பேர் துப்பாக்கி உரிமத்தை பெற்றுள்ளனர்.
அவர்களிடம், சுய பாதுகாப்பு என்ற பெயரில் எடுக்கப்பட்ட துப்பாக்கி உரிமத்தை அதற்காக மட்டுமே பயன்படுத்திட வேண்டும், துப்பாக்கியை வேறெந்த பிரச்னைக்காகவும் பயன்படுத்தக்கூடாது. துப்பாக்கி உரிமம் பெற்றவர் தவிர மற்ற எவரும் துப்பாக்கிகளை பயன்படுத்தக்கூடாது. அப்படி தவறாக பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் உரிமைதாரர்கள் மற்றும் துப்பாக்கியை பயன்படுத்தியோர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினர் எச்சரித்தனர்.
இதையும் படிங்க:பழனியில் இடத்தகராறில் துப்பாக்கிச் சூடு: முதியவர் உயிரிழப்பு, திரையரங்கு உரிமையாளர் மீது கொலை வழக்கு!