ஈரோடு:அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் காசிபாளையம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் முன்பு அதிமுக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உட்பட 100க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், “அரசுப் போக்குவரத்து பேருந்துகள் சரியான முறையில் பராமரிப்பு இல்லாத நிலையில், டீசலை சிக்கனம் படுத்த வேண்டும் என தொழிலாளர்களுக்குப் போக்குவரத்து நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது.
போக்குவரத்துக் கழகத்தின் கீழ் இயக்கப்படும் பேருந்துகள் 7 லட்சம் கிலோமீட்டருக்கு மேல் இயக்கப்பட்ட பிறகு அந்த பேருந்துகளை இயக்கக் கூடாது என்ற விதிமுறைகள் உள்ள நிலையில், அரசு பேருந்துகள் அப்புறப்படுத்தப்படுவதில்லை. கிட்டத்தட்ட 2 லட்சம் கிலோ மீட்டர் தூரம் வரை இயக்கப்பட்ட பேருந்துகளில் புதிய பாடிகளைக் கட்டி பேருந்துகளை இயக்குகின்றனர்.
இதையும் படிங்க: தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி.. ரூ.19,850 கோடியில் துவங்கி வைக்கும் திட்டப்பணிகள் என்னென்ன..?
ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய பலன்கள் எதுவும் இருவரைக் கிடைக்கவில்லை. போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள நடத்துநர், ஓட்டுநர் பணியிடங்கள் நிரப்பப் படாமல் இருப்பதால் அவை இருக்கின்ற தொழிலாளர்களுக்குக் கூடுதல் பணிச்சுமையை ஏற்படுத்தி வருகிறது.
தனியார் பேருந்துகளில் ஒரு லிட்டர் டீசலுக்கு 4.5 கிலோ மீட்டர் தூரம் ஓட்ட வேண்டும், ஆனால், அரசு பேருந்துகளில் ஒரு லிட்டர் டீசலுக்கு 6.5 கிலோமீட்டர் தூரம் வரை ஓட்ட வேண்டிய நிலைமை உள்ளது. அரசு பேருந்துகளில் நான்கில் ஒரு சதவீதம் நீக்கம் செய்ய வேண்டிய பேருந்துகளாக உள்ள நிலையிலும் ஓட்டுநர்கள் உயிரைக் கொடுத்து பேருந்துகளை ஓட்டிக் கொண்டு வருகின்றனர்.
கிராமப்புற பகுதிகளில் அரசு பேருந்துகள் போதுமான அளவில் இயக்கப்படவில்லை. அதனால் சரியான நேரத்தில் மாணவர்கள் பேருந்துகளில் மூலம் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலைமை இருந்து வருகிறது. மேலும் மகளிர் இலவச பேருந்து சேவை குறித்த நேரத்தில் இயக்கப்படுவது இல்லை, மேலும் பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடங்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகிறது. நிர்வாகம் சரியாகக் கடமைகளைச் செய்யவில்லை.
இதனால் அரசுப் போக்குவரத்துக் கழகம், தொழிலாளர்களை நியமிக்க, பேருந்துகளை வாங்க, இயக்க ஆகியவற்றிற்கு அரசிடம் இருந்து உரிய நிதியைப் பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்துக் கழகத்தில் வாரிசு அடிப்படையில் வேலை வாய்ப்பு நிரப்ப வேண்டும். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டிய பேச்சுவார்த்தையை அரசு நான்கு ஆண்டுகள் முடிந்தும் நடத்தாமல் இருக்கிறது. உடனடியாக இதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் எதையும் செய்யவில்லை - தமிழக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு!